நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையேயான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு திருத்த வேலைகள் காரணமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது.
திருத்த வேலைக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதிலிருந்த நெருக்கடி மற்றும் ஒப்பந்தக் கோரல் சிக்கல் காரணமாகவே நீண்ட காலமாக இந்தப் படகு திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படாதிருந்தது.
பொதுவான ஒப்பந்தக் கோரலின் மூலம் படகை திருத்தம் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வல்வெட்டி துறையிலுள்ள படகு கட்டுமானப் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு திருத்த வேலைகள் நடைபெற்றன.
சேவையில் ஈடுபடுத்தும் நிலைக்கு படகு வந்துள்ளபோதும் இதுவரைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில நாட்களில் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இன்னும் செலுத்தப்படாதுள்ளது.
இந்தத் திருத்த வேலைக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டவர் வேலையை செய்யாது நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
வீதிஅபிவிருத்தி அதிகார சபையினர் இந்தப் படகை திருத்தம் செய்தமைக்கான கொடுப்பனவை செலுத்தி படகை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுந்தீவு மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.