காங்கேசந்துறை சிமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டபோது சிமெந்துக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ முடியாத நிலைமை இருப்பதால் அது சாத்தியமில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இன்றையதினம்(மார்ச்07) காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான குழுவினர் நேரடியாக பார்வையிட்டபோதே மீள இயக்குதல் தொடர்பில் பிரஸ்தாபக்கப்பட்டது.
அதன்போது அஅந்தப் பகுதியை பயனுள்ள மற்றும் தொழில்வாய்பை வழங்கக் கூடிய வகையில் வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்பு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தீர்மானிப்பதற்கு இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கள விஜயத்தின்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.
1990ஆம் ஆண்டு வரையில் இயங்கிய காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை போர் காரணமாக மூடப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிமெந்து தொழிற்சாலையை இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருடன் இணைந்து பார்வையிட்டதை குறப்பிடத்தக்கது.