கனடாவில் இருந்து வந்து அனலைதீவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் இருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட நட்பு ரீதியான கட்டளையில் செயற்பட்டனர் என்று சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அனலைதீவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியது. பெறுமதிமிக்க 4 அலைபேசிகள், 4 காப்புக்கள் உட்பட 13 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த 75 வயதுடைய நாகலிங்கம் சுப்பிரமணியம் (குருசாமி) கால்கள் முறிக்கப்பட்டுப் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது கனடாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன பணிப்பில், யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் உள்ள ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் ஊடாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர் என்று முதன்மைச் சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவும் செய்ய முடியவில்லை.
வேலணைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவு சென்று சொல்லப்பட்டவர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அலைபேசிகள் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்து வந்தோம் என்று முதன்மைச் சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட தங்கக் காப்புகள் மற்றும் மோதிரங்கள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.