கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த மதிப்பு, கௌரவம் தற்போது இல்லை. மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சு தந்திரக் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், நாட்டின் கல்வித் துறையில் நகர்புறம், கிராமியபுறம் மற்றும் தோட்டபுறம் என்று வேறுபாடுகள் காணப்படுவதால் கொழும்பில் கல்விக்கான போட்டி அதி களவில் உள்ளது.
அண்மையில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 99 சதவீதமானவர்கள் பரீட்சை முடிந்த பின்னர் வினாத்தாள் கடினம் என்று கூறிக்கொண்டு வீட்டுக்கு அழுது கொண்டே சென்றார்கள். சகல மாவட்டங்களிலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியான பிறகு ஒருசில பெற்றோர் முறையற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள்.
தனது பிள்ளை குறைவான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதால் அந்த பிள்ளையை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள். தாக்குகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் அந்த பிள்ளை உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகிய பின்னர் குறைந்த புள்ளி பெற்ற பிள்ளைகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவங்களும் நாட்டில் பதிவாகியுள்ளன.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. எனது ஆட்சியில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் எட்டாம் தரத்துக்கு பின்னரே பரீட்சைகள் நடத்தப்படுகின்றன . ஆனால் இங்கு தான் முதலாம் தரத்திலிருந்து பரீட்சைகள் நடத்தப்படுகிறது. இந்த முறைமை மாற்றம் பெற வேண்டும்-என்றார்.