யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று (ஜூன் 22) காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி திட்டம், தற்போது அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் சமுர்த்தி திட்டம் எவ்வாறு இருத்தல் வேண்டும் எனும் கருப்பொருளில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களை மூன்று கட்டங்களில் சந்திப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதில் சமுர்த்தித் திட்டம், தற்போது அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் சமுர்த்தி திட்டம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என ஆராயப்பட்டன.
நலிவுற்ற மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் சமுர்த்தி ஆகும். யாழ் மாவட்டத்தில் 78 ஆயிரத்து 500 சமுர்த்திப் பயனாளிகள் காணப்படுகிறார்கள். இதைவிட காத்திருப்போர் பட்டியலிலும் பலர் காணப்படுகிறார்கள். ஆதலால் சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கைகளை குறைக்கும் வகையில் செயற்படுதல் வேண்டும்.
வேதன அதிகரிப்பு, சமுர்த்தி நியமனத் திகதி, பதில் கடமையாற்றுபவர்களுக்கான கொடுப்பனவுகள், 2017 ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களின் நிரந்தர நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர், முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.