நெடுந்தீவில் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சிச் செயலமர்வில் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நெடுந்தீவில் இருந்து முயற்சியாளர்கள் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குகொள்வதற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு மேற்கொண்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் GIZ நிறுவனத்தின் அனுசரணையுடன் GOOD MARKET நிறுவனத்தால் இந்த 3 நாள் பயிற்சிச் செலயமர்வு நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சிச் செயலமர்வுகள் இரு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்டப் பயிற்சிச் செயலமர்வு கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை நடைபெற்றது.
அதில் ஜோசெப் அன்ரன் ஜலஸ்ரின் பனைசார் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தல் தொடர்பாகவும், அலன்ரின் சிந்துயன் கத்தாளை, விளாம்பழம் மற்றும் நாகதாளி போன்ற இயற்கைப் பழங்களை பழச்சாறாக மாற்றி உல்லாசப்பயணிகளிற்கு விற்பனை செய்தல் மற்றும் பழங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும், அ.ம.அல்பேட் கடல்சார் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் துறை தொடர்பாகவும் பயிற்சிகளை வழங்கினர்.
பயிற்சிச் செயலமர்வில் பயனாளிகள் தங்கள் உற்பத்திக்கான அடையாளம், விளம்பரம், லேபிள் ஆகியவற்றை வடிவமைக்கும் பயிற்சிகளையும் பெற்றனர்.
இணைப்பு செயற்பாட்டாளர்களாக கிளிநெச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தும் உற்பத்தி செயற்பாட்டாளர்கள் பங்குகொண்டனர்.
இரண்டாம் கட்டப் பயிற்சிச் செயலமர்வு கடந்த 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நடைபெற்றது. கைவினைப் பொருட்களை தேசிய சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் வகையில் உற்பத்திகளின் தரம், பொதியிடல், குறியீடு, அடையாளம், லேபிள் மற்றும் தரச்சான்றிதழ் பற்றிய விளக்க குறிப்புக்கள் தொடர்பான பயிற்சிகளுடன், அவற்றுக்கான இணைப்பாக்கம், வடிமைப்புக்கள் தொடர்பான பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டன.
அதேவேளை, இந்த நிகழ்வில் நெடுந்தீவின் ஊரும் உறவு அமைப்பைச் சேர்ந்த கஸ்பஸ்கியூஸ்லஸ் டன்சிகா, றொபின்சன் லூர்ஜினி ஆகிய இருவரும் கலந்து கொண்டதுடன் தையல், சிப்பி, சவர்க்காரம் போன்ற அழகுப் பொருள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை இவர்கள் சந்தைப்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்தனர்.