நாட்டிலுள்ள நூலக வாசகர்களுக்கு இலத்திரனியல் ஊடாக சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன் நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவையாற்றி வருகின்ற நூலகர்கள் மற்றும் நூலக பொறுப்பாளர்களை வளப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இலங்கை தேசிய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நேற்று(ஜூலை 6) வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்ததர்மரத்ன, பணிப்பாளர் நாயகம் சுனில் ஆகியோரினால் இதன் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகர் ரவீந்திர குமார் வளவாளராக கலந்து கொண்டார்.
மென்பொருள் அடிப்படையில் பட்டியலாக்கம் தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறையில் நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் இதர நூலகங்களில் சேவையாற்றி வரும் சுமார் 130 நூலகர்கள் மற்றும் நூலக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கொஹா(KOHO) மென் பொருள் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படாத நூல்களுக்கான விலை நிர்ணயம், பட்டியலாக்கம் மற்றும் பகுப்பாக்க நடைமுறை தொடர்பிலும் இப்பயிற்சி நெறி இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்ம ரத்னவினால் பயிற்சி நெறியில் கலந்து கொண்டோர்களுக்கான சாண்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய நூலகத்தின் பணிப்பாளர் பகம பண்டார நாயக்க, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆவணத்தல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சியாம், தேசிய நூலகத்தின் தகவல் உத்தியோகத்தர் சீ.எம்.சபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.