இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் மூத்த சட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அவர்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசு உறுதியாக செயல்படுகிறது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
குற்றம் செய்தவரின் சமூக நிலையம் எதுவாக இருந்தாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், வழக்குகளின் தாமதத்தை ஏற்படுத்தும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் வழக்குகள் முழுமையடையாததற்கான காரணங்களை சட்டமா அதிபரின் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கினர்.
இந்தக் கலந்துரையாடலுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் மூத்த அதிகாரிகள் சட்டமா அதிபருடன் இணைந்து பங்கேற்றனர்.