பொரளை லெஸ்லி ரனகல மாவத்தையின் ரயில் கடவை அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த, அடையாளம் தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
களனியை சேர்ந்த 53 வயதான இந்துருகொல்ல விதான ஆரச்சிகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
அவர் அலுவலக சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த நபர் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற மேஜர் துவான் நிஷாம் முத்தாலிப் கொலைச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சுமார் 05 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.