நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு, வடதாரகை படகு என்பன திருத்த வேலைகள் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இருந்த நெடுந்தாரகை படகும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ளதால் அனைத்து அரச படகுகளும் துறைமுகப் பகுதியில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.
அரச இயந்திரப் படகுகள் பழுதடைந்த காரணத்தினால் தனியார் படகுகளும் , பல. நோ. கூ. சங்கப் படகும் நெடுந்தீவுக்கான சேவையில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மழை ஆரம்பித்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. திறந்த படகுகளே சேவையில் ஈடுபடுவதனால் மழைக்காலங்களில் பயணிகளையும், மக்களுக்கு தேவையான பொருட்களையும் கடும் மழைக்கு மத்தியிலேயே கொண்டுவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையானது பெரும் கவலையை உண்டு பண்ணியுள்ளதுடன் இது தீராத ஒரு நோயாக நெடுந்தீவு மக்களை தொற்றியுள்ளமை பெரிதும் கவலை அளித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.