யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறும் என்றும், எதிராளிகளை அன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் மேல் நீதிமன்று நேற்றுக் கட்டளையிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் சார்பாக மூத்த சட்டதரணி எம்.ரமணன் நெறிபடுத்தலில் சட்டத்தரணி ந.குமரகுருபரன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் சபையில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர முதலமைச்சராகப் பதவி வகித்த வி.மணிவண்ணன் கடந்த 31ஆம் திகதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின்னர் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், அந்த அமர்வுக்கு 24 உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
அமர்வில் உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதனால் முதல்வருக்கான முன்மொழிவுகள் கோரப்பட்டன. தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர் எம்.ரெமீடியஸ் சபையில் இருந்து வெளியேறினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.
அதன்பின்னர் இடைக்கால முதல்வர் பதவிக்கான தெரிவை தொடர்ந்து நடத்துவதற்கு கோரம் இல்லை என்று தெரிவித்து உள்ளூராட்சி ஆணையாளர் அமர்வை ஒத்திவைத்தார்.
எனினும், உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின்படி யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று கடந்த 20ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அதையடுத்து அவர் ஆர்னோல்ட் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இ.கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே மேல்நீதிமன்ற மேற்பட்ட கட்டளையைப் பிறப்பித்துள்ளது.