நெடுந்தீவின் நிலையான அபிவிருத்திக்காக “ மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப் பொருளில் நெடுந்தீவில் நடத்தப்படவுள்ள “நெடுவூர்த்திருவிழாவில்” துறைசார்ந்த திட்ட நிகழ்வுகளை சிறப்புற நடத்துவதற்கு ஏதுவாகஅவை தொடர்பில் கிளிநொச்சி நகரில் ஆலோசனைக் கலந்துரையாடல் நேற்றையதினம் (ஜூலை21) கிளிநொச்சி- டிப்போ சந்தி அருகாமையில் உள்ள மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் கிளிநொச்சி பிரதேசம் சார்ந்து தமது ஒத்துழைப்புகளினை வழங்குவதுடன், அதற்கான நிதி, பொருள், உடல் ரீதியான பங்களிப்பினையும் வழங்கவுள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்டோர் உறுதியளித்திருந்தனர்.
அபிவிருத்திக்கான செயற்திட்ட விழாவின் போது சகல வழிகளிலும் ஒத்துழைப்பதுடன் அது தொடர்பில் அமைக்கப்படும் குழுக்களிலும் இணைந்து செயற்படவும் முன்னேற்பாட்டு வேலைகளுக்காக திருவிழாவுக்கு முன்பே நெடுந்தீவுக்கு சென்று சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்டோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்வில் நெடுந்தீவின் வளர்ச்சியில் பங்கேற்கவுள்ள உறவுகள், நண்பர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊரும் உறவும் நிறுவனத்தினர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.