உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதிமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முறையின்படி வங்கி வைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வங்கி முறைமை வீழ்ச்சியடையாது. இது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது இலங்கையில் பெரும் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கட்டமைப்பிற்கோ வங்கி வைப்பாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதியும், நிதி இராஜாங்க அமைச்சர்களும் கூறுகின்றபோதும் நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வேறு விதமாக இருக்கின்றன.
தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது சமூக கட்டமைப்பில் பெரும் முரண்பாடுகள் தோற்றம் பெறும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான செயற்திட்டங்களை ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். ஆனால் அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு எமது யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி ஆயிரத்து 385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் வெளியிட்டிருந்த தகவலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.