தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அமைச்சரவைக்கு வழங்கிய தெளிவுபடுத்தல், தேசிய கடன் மறுசீரமைப்பு கொள்கைத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படாமைக்கு அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் சனிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 148 ஆவது பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிதி தொடர்பான பிரேரணை தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பது அரசாங்க நிதி தொடர்பான குழுவின் பொறுப்பாகும்.
அரசாங்க நிதி தொடர்பான குழு தலைவராக பதவி வகிப்பதால் விசேட வரபிரசாதங்கள் கிடைக்கின்றது என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். உண்மையில் எந்த வரபிரசாதங்களும் கிடைப்பதில்லை. நாட்டுக்காக சுய விருப்பத்துடன் குழுவில் சேவையாற்றுகிறோம்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த இரண்டு நாள்களாக அரசாங்க நிதி தொடர்பான குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. முதல் நாள் கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இரண்டாம் நாள் கலந்துரையாடலில் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் குழு ஊடாக இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாத காரணத்தால் வாக்கெடுப்புக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய குழுவில் பெரும்பாலான தரப்பினர் தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் செயற்திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கி தயார்படுத்திய செயற்திட்ட அறிக்கை, ஜனாதிபதி தலைமையில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் ஆற்றிய தெளிவுப்படுத்தல் தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்குள் நேரடியாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
நிபந்தனைகளின் அடிப்படையில்தான் குழு அனுமதி வழங்கியது. செயற்திட்ட கொள்கை திட்ட அறிக்கைக்கும், நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தின் தினப் பணிகளின் அறிவித்தலுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர் ஆற்றிய தெளிவுப்படுத்தலை நேரடியாக உள்ளடக்கப்பட வேண்டும் என அரசாங்க நிதி தொடர்பான குழு வழங்கிய நிபந்தனை கவனத்தில்கொள்ளப்படவில்லை. இது முற்றிலும் தவறானது.-என்றார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சரின் உரையின் போது அந்த விடயங்கள் திருத்தம் செய்யப்படும் என்றார்.
அப்போதுர் குறுக்கிட்ட ஹர்ஷ டி சில்வா நிதி இராஜாங்க அமைச்சரவையின் உரையின் போது திருத்தம் செய்யப்படும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவாதத்தை ஆரம்பிக்க முன்னர் திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதையே அதையடுத்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா முன்வைத்த நிபந்தனைக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அமைச்சரவைக்கு ஆற்றிய தெளிவுப்படுத்தல் செயற்திட்ட அறிக்கைக்குள் நேரடியாக உள்வாங்கப்படும் இதைத் திருத்தமாக அறிவிக்கிறோம்-என்றார்.