நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகைத் திருத்தும் பணிகள் வல்வெட்டித்துறையில் ரேவடி படகு கட்டும் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைகளில் 80 வீதமான வேலைகள் முடிவு தற்போது முடிவுற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் 1.63 மில்லியன் ரூபா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத் தொகையின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்த நிதியில் 25 வீத நிதி கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், பெரும் நிதிச் செலவுடைய வேலை திட்டம் என்பதால் கோரப்பட்ட முற்பணமும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் படகு கட்டுமான ஒப்பந்தகாரர் கவலையுடன் தெரிவித்தார்.
நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து வேலைகளை தொடர்ந்து மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும், புலம்பெயர் தேசத்தில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சிலரது நம்பிக்கை வார்த்தைகளின் அடிப்படையில் இவ்வளவு வேலைகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேலையைக் கையளிக்கும் போது ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சில பொருள்களையும் உதவி பணியாளர்களையும் தருவோம் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை என்று தெரிவித்த ஒப்பந்தகாரர், புலம்பெயர் உறவுகளின் கோரிக்கைக்கு அமைய குறைந்த அளவு பணியாளர்களை ஈடுபடுத்தி வேலைகள் முன்னகர்த்தப்படுகின்றன என்றும் கூறினார்.
குமுதினிப் படகு சரியான பராமரிப்பு இன்மையாலேயே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. படகில் உள்ள பாகங்கள் அனைத்தும் பெறுமதியானவையும் தரமானவையும் அவற்றை சிறப்புற பராமரித்தால் நீண்டகால பயனைப் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
படகின் அடிப்பகுதிக்கான செப்பு தகடுகள் பொருத்துவதற்குரிய செப்பு ஆணிகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் அவற்றை நெருக்கமானவர்கள் இந்தியா சென்று வரும்போது பகுதி பகுதியாக கொள்வனவு செய்து பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்கான நிதி விடுவிக்கப்படுமாயின் நிதி கிடைக்கின்ற நாளில் இருந்து 15 தினங்களில் பயணிகள் பாவனைக்காக படகினை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது விடயமாக பொறுப்பான அதிகாரிகளும் நெடுந்தீவு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும் தனி அக்கறை எடுத்து செயற்பட்டுப் படகை விரைவில் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவு மக்கள் நலனைக் கருத்தில் எடுத்து குமுதினி படகின் திருத்த வேலைகளை செய்து முடிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.