யாழ்ப்பாணத்தில் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகள் மூட வேண்டி வரும் என கணிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
உரும்பிராய் ஞானவைரவர் சமூக அறக்கட்டளை சார்பில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) உரும்பிராயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பெரிய பிரச்சினை சனத்தொகை குறைந்துள்ளமை. அதனால் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகள் மூட வேண்டி வரும் என கணிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
பூங்குடி தீவு, வேலணை மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் பாடசாலைகளானது மூடப்பட்டு வருகின்றது. போதாக்குறைக்கு தீவகத்தில் இன்டர்நேஷனல் பாடசாலை ஒன்றினை பெரிய அளவில் ஏற்பாடு செய்து மதம் சார்ந்த பாடசாலை ஆக அனைவரையும் ஈர்க்கின்றார்கள். ஏற்கனவே உள்ள பாடசாலைகள் கதவு மூடப்படுகின்ற தருவாயில் இன்டர்நேஷனல் பாடசாலை திறக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தனியாரை தட்டி கேட்பதற்கு யாரும் இல்லாத நிலை காணப்படுகிறது. அற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அறக்கட்டளை முதலாவது கட்டத்தில் 50 லட்சத்துக்கு மேல் பணி செய்து உள்ளீர்கள்.
அடுத்த கட்டங்களில் இப்பகுதிகளில் மூடு போன்ற நிலையில் உள்ள பாடசாலைகளை மூடாமல் செய்ய என்ன வழி? அத்துடன் மருத்துவ உதவி, சமூகத்திற்கான அவசியதேவைக்குரிய உதவி என அனைத்தையும் பகுதி பகுதிகளாக பிரித்து வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு எதை செய்ய விருப்பம் அவர்கள அதை அபிவிருத்தி செய்யலாம். யாழ்ப்பாணத்தில் இருந்த அறக்கட்டளைகள் பல பேணுவாரற்று கைவிடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை மடம், வெள்ளிக்கிழமை மடம், அன்ன சத்திர மடம் மற்றும் கீரி மலையில் இருந்த மடம் ஒன்றிற்கும் கோடிக்கணக்கில் அறக்கட்டளையில் பணம் இருந்தது. இப்பொழுது அந்தப் பணம் எங்கே என்று தெரியாது.
சைவ பரிபால சபை வெளியிடும் இந்து சாதனம் எனும் பத்திரிகையில் அறக்கட்டளைகளின் விபரம் அதற்காக விடப்பட்ட நிலங்களின் தொகையும் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அது 1917 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்த அறக்கட்டளைகள் தொடர்பானது. இன்று அவை இருந்த இடங்களுக்கு தெரியாது, மடங்கலும் இல்லை. அவ்வாறாக அதைத் தேடிப் பார்த்தால் அதில் கொத்து ரொட்டி கடைகள் உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வந்த ஆபத்து அறத்தை சரியாக பேணாத காரணத்தால் கர்ம வினைகளை அனுபவிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் இருப்பாலை சந்தியிலிருந்த செவ்வாய்க்கிழமை மடத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்னதானம் இடம்பெறும். கிளிநொச்சி, சுழிபுரம் மறவன்புலோ போன்ற இடங்களில் இவற்றிற்கு எங்கு எங்கு இடங்கள் இருக்கு என்கின்ற பட்டியல் உண்டு. அவ்வாறு இருபாலை சந்தியில் இருந்த செவ்வாய்க்கிழமை மடம் குடிப்பாடு அடைந்த கட்டடத்தின் துண்டுகளாக உள்ளது.
ஆகவே அறக்கட்டளைகள் நீண்ட ஆயுளோடு இருக்க சிறந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 23 வருடங்களாக சிவபூமி அறக்கட்டளை, இரண்டு பாடசாலை, இரண்டு முதியோர் இல்லம் மற்றும் ஆசிரமங்கள் ஐந்து போன்றவற்றை நடத்தி வருகின்றோம். புலம்பெயர் சமூகமானது இவ்வாறான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. உரும்பிராய் இந்து கல்லூரியை பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில் அது வரலாறு படைத்த பாடசாலை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் கணேசலிங்கம் இறப்பதற்கு முன் அதனை எவ்வாறு ஆயினும் காப்பாற்ற வேண்டும் என என்னிடம் கூறி கவலை அடைந்தார். இஸ்லாமியர்களின் அறக்கட்டளையே இன்று இலங்கையில் உச்சகட்டத்தில் உள்ளது.
அவர்கள் தமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தையே தென்கிழக்கு பல்கலைக்கழககமாக நிறுவி, வைத்தியசாலைகள் நிறுவி மற்றும் இன்னொரு பல்கலைக்கழகத்தினை இஸ்லாமியர்கள் கிழக்கு இலங்கையில் அமைத்து அதை அரசாங்கத்திடம் பிரச்சனையாக உள்ளது. இலங்கையில் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற அறக்கட்டளையில் முஸ்லிம்களின் அறக்கட்டளையே முன்னுக்கு உள்ளது.
ஏனெனில் ரவூப் ஹகீம் அமைச்சராக இருந்தபோது, அனைத்து இஸ்லாமியர்களது அறக்கட்டளைகளினை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தார். ஆனால் எம்முடையது சைவபரிபாலன சபை, சைவ வித்யா விருத்தி சங்கம், சிவபூமி அத்துடன் சில சங்கங்களே இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளது. அறக்கட்டளை நீண்ட ஆயுளோடு நிலைக்க அனுபவம் மற்றும் நல்ல வளங்களை சிந்தித்து செயல்பட வேண்டும்.
எதிர்வரும் 24ம் தேதி சிவபூமி அற கட்டளை கிழக்கு இலங்கையில் கொக்கட்டி சோலையில் பல கோடி ரூபாய் செலவில் திருமந்திர அரண்மனை கட்டி திறக்க உள்ளோம். 3000 பாடல்களும் சிவபூமி விளையாட்டு மைதானத்தில் அடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எழுத்துப் பிழை ஏற்பட்டால் ஒரு கல்லினை மாற்ற வேண்டும். அவ்வாறாக 16 கல்லு மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவு கஷ்டப்பட்டு கிழக்கு இலங்கையில் திறந்து வைக்கப்பட உள்ளது, என்றார்.
இந்த நிகழ்வில், யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், பிரதேச செயலாளர், அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.