கரைதுறைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றை நாடியபோதும், அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இலங்கை தமிழரசுக் கட்சி, இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் கரைத்துறைப் பற்றுப் பிரதேச சபையைத் தமது ஆளுகைக்குள் எடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று முல்லைத்தீவு கரைதுறைப் பற்றுப் பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் தராசு சின்னத்தில் போட்டிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்வது தொடர்பில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
அதற்காக கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகள் தவிசாளர் பதவியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்குதல்
கல்முனை மாநகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குதல்
ஏறாவூர் நகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குதல்
திருகோணமலையின் உள்ளுராட்சி சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகளவு ஆசனங்கள் பெறும் இடங்களில் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குதல் என்ற உடன்பாட்டுக்கு இரு கட்சிகளும் வந்துள்ளன. அதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.