கனடா ‘வாக்கு வங்கி அரசியல்’ மூலமே இயக்கப்படுகின்றது என்று இந்தியா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை இலங்கை ஆதரித்துள்ளது.
‘காலிஸ்தான்’ விவகாரத்தைக் கையாள்வதில் கனடா ‘வாக்கு வங்கி அரசியலால்’ இயக்கப்படுவதுபோல் தெரிகின்றது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கனடாவின் செயற்பாடுகள் வாக்கு வங்கி அரசியலால் தூண்டப்பட்டவை போல தெரிவதாகவும், இது அண்மையகாலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஊடக சந்திப்பொன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிடும் காணொளி சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் பகிரப்பட்டுவருகின்றது.
அக்காணொளியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை ஆதரிக்கும் வகையில் ‘வாக்கு வங்கி அரசியல் தவிர வேறென்ன?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென ‘காலிஸ்தான்’ என்ற தனித்த அரசை நிறுவுமாறு வலியுறுத்திவரும் ‘காலிஸ்தான் இயக்கம்’ என்ற பிரிவினைவாத இயக்கத்தினர், ஏற்கனவே இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைப் பெருமைக்குரிய விடயமாகக் காண்பிக்கும் வகையில் கனடாவின் பொதுவிடமொன்றில் உருவப்பொம்மைகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியிருந்த விவகாரத்திலும் இலங்கை அதன் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
‘நீங்கள் பயங்கரவாதத்தைக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில், அதனூடாக பிறிதொரு தலைமுறையைத் தவறாக வழிநடத்துகின்றீர்கள்’ என்று அப்போது அமைச்சர் அலி சப்ரி கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.