நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது.
COVID – 19 தொற்றுக்குள்ளான 57 பேர் நேற்று முன்தினம் (ஜூலை 11) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில்,
▪️கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து 13 பேர்
▪️அவர்களோடு தொடர்புகளை பேணிய 30 பேர்
▪️இராஜாங்கனையைச் சேர்ந்த 5 பேர்
▪️வெலிக்கந்தை பகுதியிலிருந்து 2 பேர்
▪️ஹபராதுவ பகுதியிலிருந்து ஒருவர்
▪️லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவர்
▪️ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு வருகைதந்த 4 பேர்
▪️குவைத்திலிருந்து வருகைதந்த ஒருவர்
உள்ளிட்ட 57 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 700 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனையோர் வசிக்கும் பகுதிகள் தொடர்பில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்கள் தற்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.