கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 11) திறந்துவைக்கப்பட்டது.
கலாசாலையில் 1952 – 1953 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் ஆசிரியை பராசக்தி கந்தையா இதனை திறந்துவைத்தார்.
மேலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ஐ.எம்.எச்.ஓ. (IMHO) மற்றும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ரட்ணம் பவுண்டேஷன் என்பவற்றின் அனுசரணையில் திறன்பலகையும் அதற்குரிய மடிக்கணினியும் இதன்போது வழங்கப்பட்டது.
கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் களனி ஹேமாலி, அமைச்சின் செயற்றிட்ட பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தனது 95ஆவது வயதிலும் தான் கற்ற கலாசாலை மீதான பற்றுடன் இந்நிகழ்வில் மூத்த ஆசிரியர் பராசக்தி ஆர்வத்துடன் கலந்துகொண்டு, திறன் பலகையில் எழுதியதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் தனது பயிற்சிக்கால அனுபவங்களை உரையினூடாக பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.