அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக நேற்று (ஓகஸ்ட் 16) ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் கையளிக்கப்பட்டுள்ள என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளன என்று ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தொல்லியல் ஆய்வு செயற்பாடுகள் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்த வரலாற்றுத்துறை நிபுணர்களின் பங்குபற்றுதல் மற்றும் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, தொல்லியல் திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் சிலரின் விருப்பு வெறுப்பு சார்ந்த முன்னெடுப்புக்களாக அமைவதை அனுமதிக்க கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பறாளை முருகன் ஆலயம், கீரிமலை தீர்த்தக் குளம் மற்றும் பருத்தித்துறை இறங்கு துறை போன்ற பகுதிகளை, தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தி அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துறைசார் நிபுணர்கள், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் போன்ற யாருடைய கருத்துக்களும் உள்வாங்கப்படாமல் கொழும்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானில் உள்ளடக்கப்பட்டுள்ள பறாளை முருகன் ஆலயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் தவறானவை என்பதை வரலாற்றுத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் சிலவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மாறாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைளை நிறைவேற்ற முடியும் என்ற ஈ.பி.டி.பி.கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு இந்த ஆவணத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தைத முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குச் சாத்தியமான 3 கட்டப் பொறிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.