விளையாட்டுத்துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்து, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை அடையாளங்கண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர் பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளைஞர்கள் தொடர்பில் பாரிய எதிர் பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும், அவர்களின் முன்னேற்றத் திற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகளை பிரதேச ரீதியில் செயற்படுத்த ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இளைஞர், யுவதிகளின் பிரச்னைகள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், தேசிய இளைஞர் படையணி ஊடாகவும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், முக்கியமாக இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதுடன் அவர்களுக்கு திறன்விருத்தி, தகவல் தொடர் பாடல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள், சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொடுத்தல் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். தேசிய ரீதியில் மத்திய அரசுக்கும் மாகாண விளையாட்டுத்துறைக்கும் இடையில் நிலவக்கூடிய முரண்பாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மத்திய, மாகாண என்ற வேறுபாடுகள் இன்றி எல்லோரும் ஒன்றிணைந்து இந்நாட்டு விளையாட்டுத்துறையின் மேப்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.