2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தேர்ச்சி புள்ளி முறை ( Demerit points ) தொடங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முறையின் கீழ், 24 தேர்ச்சி புள்ளிகளை பெறும் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் முடிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.
ஏழு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள மோட்டார் போக்குவரத்து சட்டத்தை புதுப்பித்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப்பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் இயக்கப்படும் 50 மின்சார பஸ்களை வினைத்திறன் மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உருவாக்கும் முன்னோடி செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.
லக்திவ இன்ஜினியரிங் கம்பனி பிரைவேட் லிமிடெட் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.