மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை வழியாக வாழைச்சேனை – அக்கரைப்பற்று செல்லும் பேருந்து மீது தாக்குதல் நடாத்தியதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வாழைச்சேனையிலிருந்து திங்கட்கிழமை காலை மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் 18 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து இன்று(செப்ரெம்பர் 25) அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகாலை வேளையில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டனர்.தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்று அக்கறைப்பற்றுக்குச் செல்வதன் காரணமாக குறித்த பஸ் வண்டியில் வழமையாக தமது வைத்தியத்தேவைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச்செல்லும் கூடுதலான நோயாளிகளும் நோயாளிகளைப் பார்வையிடுவோரும் பல்கலைக்கழக மாணவர்கள், அரச, தனியார் அலுவலர்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகச் செல்வோரும் பயணிப்பது வழக்கமாகும்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.