வடமாகாண கல்வி வலயங்களில் தகுதியற்ற பெறுபேறுகளுடன் ஆசிரியர்கள் சிலர் கடமையில் – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
வடமாகாண கல்வி வலயங்களில் தகுதியற்ற பெறுபேறுகளுடன் முறைகேடான நியமனத்தினூடாக ஆசிரியர்கள் எனும் போர்வையில் கடமையாற்றி வருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வாறு தகுதியற்ற நிலையில் உள்ள பலரை வடமாகாண கல்வி அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு உள்ள ஒருவர் தொடர்பாக வடமாகாண கல்வி அதிகாரிகளுக்கு நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியிருந்த போதும் அந்த அதிகாரி ‘இது போன்ற பலர் இருக்கிறார்கள்’ எனப்பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துமிருந்தார்.
அவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் நேரடியாகவே வலியுறுத்தியிருந்தபோதும், இன்று வரை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டே வருகின்றார்கள்.
அத்துடன் கல்விப் புலத்தின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை அமைக்க ஆளுநரும் பிரதம செயலாளரும் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் –
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற பல மில்லியன் மோசடி தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளே முழப்பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் கல்வி அதிகாரிகளின் போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்விடயம் கணக்காய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கல்வி அதிகாரிகளின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் வடமாகாண கல்விப் புலத்தில் புதிய விடயமல்ல. மாறாக, வரம்புக்கு மீறிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதாலேயே இவ்விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வடமாகாண கல்விப் புலத்தில் சீரான கணக்காய்வு மேற்கொண்டால் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளிவரும்.
இதற்கு முன்னரும் கல்வித்துறைசார்ந்து பல இடங்களில் மோசடிகள் நடைபெற்றிருந்தது. இன்றும் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்களை வடமாகாண கல்வி அதிகாரிகள் காத்துவருவது தொடர்பாக, பல தரப்பினர்களிடம் முறையிட்டிருந்தோம். ஆயினும், அவர்களால், குறித்த அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும் கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டு எமக்கு பிரதியிடப்படும். மேலதிகமாக எவ்வித கரிசனையும் சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
பிரபாலமான பாடசாலைகள் சிலவற்றின் நிதி மோசடிகள் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதாரங்களை கல்வியமைச்சுக்கு வழங்கியிருந்தது. இன்று வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பாக விசாரணைக்குழுவை அமைப்பதும் பின்னர் அதனை இழுத்தடிப்பதுமே வழக்கமாகவுள்ளது.
மாறாக, கல்விப் புலத்தில் நடைபெறும் மோசடிகளையும், முறைகேடுகளையும் எதிர்த்து, அதனை வெளிக்கொண்டு வருபவர்களை, குழப்பவாதிகள் போல் சித்தரித்து அவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதே வடமாகாண கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட சாதனையாகவுள்ளது.
முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பல லட்சங்கள் மோசடி செய்தமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தது. அவற்றுக்கு நடவடிக்கை எடுக்காது அதிகாரிகள் இருந்தபோது, இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய பல தொழிற்சங்கப் போராட்டங்களை செய்தே பணிப்பாளரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரமுடிந்திருந்தது. விசாரணையின்போது அவரால் பண மோசடி உள்ளிட்ட பல முறைகேடுகள் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டு, மோசடி செய்த பல லட்சம் ரூபா தொகை பணம், மீளளிப்பு செய்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் மடு வலய பணிப்பாளராக பதவிஉயர்வு வழங்கியிருந்தனர்.
ஒருவர் பணமோசடி செய்தால் மீளளிப்பு செய்வதன் மூலம் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலைமையே வடமாகாணத்தில் உள்ளது. அவர்களுக்கு உரிய வேளைகளில் பொருத்தமான இறுக்கமான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் அவை முன்னுதாரணமாக இருந்து இன்று பல மோசடிகளை தவிர்த்திருக்கும்.
வவுனியாவின் பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவரின் பல லட்சம் ரூபா மோசடிகள் நிரூபிக்கப்பட்டு, அவரால் பணம் மீளசெலுத்தப்பட்டுமிருந்தது. தண்டனையாக, 55 வயதுடன் குறித்த அதிபர், கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும் என்று பரிந்துரை அமைந்திருந்தது. ஆயினும், மனிதாபிமான அடிப்படை என்னும் போர்வையில், அவரை வேறொரு பாடசாலைக்கு அதிபராக நியமித்துள்ளனர். அங்கு இன்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பாடசாலைக்கு அருகாமையில் மதுவிற்பனை நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்த்துவந்த நிலையில், மதுவிற்பனை நிலையம் அமைக்க ஆட்சேபனை எதுவுமில்லை என கடிதம் வழங்கியவரும் குறித்த அதிபரேயாவார். இதற்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டே அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
தீவகப் பிரதேசத்தின் பாடசாலையில், உளவியல் சீரற்ற அதிபர் ஒருவர் அடாவடியிலும், மோசடியிலும் ஈடுபட்டு ஆசிரியர்களை அச்சுறுத்திவருவதுடன், பாடசாலை சொத்துக்களை கையாடியிருந்தார். குறித்த அதிபர் பொருட்களை வெளியே எடுத்து சென்றதை கண்டித்திருந்த ஆசிரியருக்கு, புனைவான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி இடமாற்றம் வழங்கியிருந்தனர். குறித்த அதிபரின் கட்டட ஒப்பந்த மோசடி தொடர்பாக, ஒப்பந்தக்காரரால் காவல் துறையில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றபோது, ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்’ என்றே பதிலளிக்கப்பட்டிருந்தது.
பல மோசடிக்காரர்கள் இன்று கல்விப் புலத்தில் கௌரவமாக நடமாடுவதற்கு வடமாகாண கல்வி அதிகாரிகளே அனுமதியளித்துள்ளனர். முறையற்ற வகையில் சட்ட வலுவற்ற விடுவிப்புக்களை வழங்கி, பல ஆசிரியர்களின் பணங்கள் மோசடி செய்யப்படுவதற்கு கல்வி அதிகாரிகள் இன்றும் துணைபுரிந்துவருகின்றனர். இவர்களின் துணையுடன் பாடசாலைகளில் ஒருபோதும் கடமையாற்றியிராதவர்களை, தொண்டர் ஆசிரியர் நியமனத்தின் மூலம் மோசடியாக உள்வாங்கியுள்ளனர். இவை அதிகாரிகளின் துணையின்றி ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. இவ்வாறான முறைகேடுகள் ஏதோவொரு இலாப நோக்கம் கருதியே நடைபெற்றிருந்ததாக அறிய முடிகின்றது. இவ்விடயம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தும், இன்றுவரை மௌனமாகவே இருந்துவருகின்றனர். அவற்றை சீர்செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், தகுதியற்றவர்கள் மூலம் கல்வி சீரழிவதற்கு அதிகாரிகளே துணைநிற்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி, வடமாகாண கல்வியமைச்சு முறையற்ற அதிபர் நியமனங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அதிபர் நியமனம் சீர்செய்யப்படாமலேயே மூடி மறைக்கப்பட்டது. இன்றுவரை சீர்செய்யப்படவில்லை. மாறாக, முறைகேடான வகையில், பாடசாலைக்கு நியமனம் பெற்ற அதிபரின் முறைகேடுகளுக்கும், ஏதேச்சதிகாரங்களுக்கும் அதிகாரிகள் துணைநிற்பதுடன் – முறைகேடுகளை எதிர்க்கும் ஆசிரியர்களுக்கு – இடமாற்றச்சபையின்றி தன்னிச்சையாக முறையற்ற இடமாற்றங்களை வடமாகாண அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இவ்வாறு பலரின் முறைகேடுகள் அதிகரிப்பதற்கு வடமாகாண அதிகாரிகளே தொடர்ச்சியாக துணைபோகின்றார்கள்.
அதிகாரிகள் சிலர் தமது சொத்துக்களை, தமது உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றி, கூறுவிலைகோரலில் மோசடிசெய்து, அரச நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கி உழைத்துவருகின்றனர். வியாபார நோக்கில் அனைத்தையும் சிந்திக்கும் சில அதிகாரிகள், வடமாகாண கல்வியையும் வியாபாரமாக்கி, வடமாகாண கல்வித்துறையை ஊழல்களும், மோசடிகளும், முறைகேடுகளும் நிறைந்த இடமாக இன்று மாற்றியுள்ளனர்.
பல மோசடிகள் நிறைந்துள்ள வடமாகாண கல்வித்துறையை சீரமைக்குமுகமாக, கல்வியமைச்சின் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குழு அமைக்குமாறு வடமாகாண பிரதம செயலரை இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டிருந்ததோடு, வடமாகாண ஆளுநருக்கும் பிரதியிட்டிருந்தது. சாட்சியங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. ஆயினும், எவ்வித நடவடிக்கைகளும் வடமாகாண பிரதமசெயலரோ அல்லது ஆளுநரோ எடுக்க முன்வராதமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
எனவே – கல்வியதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்கமாகத் தெரிவிப்பதோடு, அவ்விசாரணைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவிக்கின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.