நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை 2 திருத்த வேலைகாரணமாக கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடாது காணப்பட்டது. திருகோணமலையில் திருத்த வேலைகள் யாவும் நிறைவு பெற்று கடந்த மாதம் சேவைக்காக வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக சேவைக்கு வருவதற்கு தாமதமாகின.
ஆயினும் இன்றைய தினம் (ஜீலை 14) காலை 11.30 மணியளவில் வடதாரகைப் படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தினை வந்து சேர்ந்துள்ளது நாளைய தினம் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு படகு சரியான முறையில் சுத்தம் செய்யப்படவுள்ளதுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (ஜீலை 16) முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆயினும் நேர அட்டவணை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது இரண்டு தடவைகள் சேவையில் ஈடுபடும் எனவும் காலையில் நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலையில் மீண்டும் நெடுந்தீவு துறைமுகத்தினை வந்தடையும் எனவும் அது தொடர்பாக அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பயனிகள் போக்குவரத்து நேர அட்டவணை நாளை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
குமுதினிப்படகும் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு துறைமுகத்தில் தரித்து நிற்பதால், அதனையும் மிக விரைவாக திருத்தம் செய்து மக்களது போக்குவரத்துக்கு வழியமைக்குமாறும் அது வரைக்கும் காலையில் இரண்டாவது சேவையாக பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால் மக்கள் போக்குவரத்து தடையின்றி இடம் பெறும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.