வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் இன்று (ஜனவரி 8) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படும் IRCON நிறுவனம் திருத்த பணிகளை மேற்கொள்கிறது.
ரயில் பாதை சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மதவாச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,எபோக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரயில் திணைக்கள அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திருத்தப் பணிகளை அடுத்து இன்று (ஜனவரி 8) முதல் 5 மாத காலப்பகுதிக்குள் அநுராதபுரத்துக்கும், வவுனியாவுக்கும் இடையிலான ரயில் தண்டவாளங்களை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் வடக்குக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.