வடக்கு மாகாண ஆளுநராக ஜோன் அமரதுங்க எதிர்வரும் 7ஆம் திகதி நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவி வகிக்கும் நிலையில், அந்த இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பதவியில் உள்ள ஆளுநர்கள் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அந்தப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆயினும் தற்போது தேர்தல்களை நாடு சந்திக்க வேண்டியுள்ள நிலையில், ஆளுநர் பதவிகளில் மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான செந்தில் தொண்டமானைக் கொண்டுவர நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு ஆளுநர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்குப் பலரும் முயற்சித்து வரும் நிலையில் நன்கு தமிழ் தெரிவித்த பெரும்பான்மையினத்தவரான ஜோன் அமரதுங்கவை ஆளுநராக ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
இன்று பிரிட்டன் செல்லும் ஜனாதிபதி வெசாக் தினத்துக்கு முந்தைய நாள் நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறியமுடிகின்றது.