வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 7) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் க. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் பிரச்சினைகள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டது.
இதுவரையில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் வடமாகாண மீனவர்களை ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கில் கடல் அட்டை பண்ணைகள் திட்டங்கள் தான்றோன்றித்தனமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசு உடனடியாகத் இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுடன், அவ்வாறு நடைமுறைப்படுத்தும் இடங்களில் மீனவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மீனவர்கள் முகம் கொடுக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாணத்தின் சகல பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அடுத்த மாதம் வட்டமேசை கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிர்வாக உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார, திட்ட இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன், பெண்கள் திட்ட இணைப்பாளர் லவீனா ஹசந்தி, ராஜன், பிலோமினா மற்றும் வட மாகாண இணைப்பாளர், மாவட்ட இணைப்பாளர்கள் எனப் பலர் கலந்துக்கொண்டனர்.