தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார யாழ்ப்பாண இன்று (ஜனவரி 4) யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்ததல் தொடர்பான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள ( Global Fair – 2023) “வடக்கின் ஒளிமயம்” நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னாய்த்தக் கலந்துரையாடலாகவே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்கும் வகையிலும், தொழில் தொடர்பான பிரச்சினைகள், EPF மற்றும் ETF பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு காணும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ப.செந்தில்நந்தனன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன் மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ். பிராந்திய மின் பொறியியலாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.