லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த விலை உயர்வானது, நாளை முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாகும். ஒடோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாகும். மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகும்.
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் விலை திருத்தத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.