எதிர்வரும் 15 நாள்களுக்கு வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை உயர்வாகக் காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 13) காலை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்காக 992 கிலோமீற்றர் தூரத்தில் சூரியன் நிலைகொண்டிருந்தது.
யாழ்.மாவட்டத்திற்கு மேல் நாளை (ஏப்ரல் 15) சனிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் வெப்பநிலை 37 பாகை செல்சியஸைத் தாண்டி அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேல் நாளை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில் இப்பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகலாம் என இலங்கை வளிமண்டலத் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய வானிலை அதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம்கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் கிராஞ்சி, கொக்காவில் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் நீள் வட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் தென் துருவத்தில் இருந்து வட துருவம் நோக்கி சூரியன் உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் ஆரம்பித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை அநுராதபுரம் மன்னார் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்த நிலையில் தொடர்ச்சியாக நகர்வடைந்து முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது. நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேலாக நாளை சூரியன் உச்சம் கொடுத்து இலங்கையை விட்டு வெளியேறும் என தர்மலிங்கம் பிரதீபன் கூறினார்.
நாளை மற்றும் அடுத்து வரும் நாட்களில் யாழ். மாவட்டத்தின் வெப்பநிலை 37 பாகையை தாண்டக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளன. அக்காலப் பகுதியில் இடியுடன் கூடிய மழையோ அல்லது மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளன.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலைமையை எதிர்கொள்வதற்கு நாம் எம்மைத் தயார்ப்படுத்துவது சிறந்ததாகும்.
- நண்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை இயலுமான வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
- போதுமான அளவுக்கு நீர்( அது பானங்களாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ இருக்கலாம்) அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- அடுத்த சில வாரங்களுக்கு கிணறுகள் துப்புரவாக்கி இறைத்தல் அல்லது இயலுமான வரை நீரை வீணாக வெளியேற்றல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
- தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சுதல் செயற்பாட்டை பகல் பொழுதுகளில் மேற் கொள்ளாது மாலை வேளைகளில் மேற்கொள்ளுதல்.
- வீடுகளில் நாளாந்த பாவனைக்கு பயன்படுத்தப்படும் திறந்த கிணறுகளின் மேற்பகுதிகளை சூரிய ஒளி படாதவாறு மூடி வைத்தல். இது கிணறுகளில் பாசி வளர்வதையும் குறைக்கும்.
- நீரை தவறாக பயன்படுத்துவதையும் (Misuse) துஸ்பிரயோகம் செய்வதனையும் (Abuse ) தேவைக்கு மேலதிகமாக பயன்படுத்துவதனையும் (Over use) தடுத்தல்.
- தாவரங்களின் கிளைகளையோ, விதானங்களையோ அகற்றுவதை நிறுத்துதல்.