உயிரிழந்த தனது 9 மாதக் குழந்தையுடன் தாயொருவர் பல மணிநேரம் நோயாளர் காவு வண்டியில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் காக்க வைக்கப்பட்டமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த 9 மாதக் குழந்தை ஒன்று நேற்று (ஜூலை 24) பால் புரைக்கேறி உயிரிழந்தது. யாழ். போதனா மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையைப் பெற்றே குழந்தையின் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோருக்குத் தெரிவித்தது.
யாழ். போதனா மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு மருத்துவமனை மருத்துவர் தொடர்பு கொண்டபோது, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தாய் குழந்தையின் சடலத்துடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் வந்து, அங்கிருந்து வேலணை பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
நோயாளர் காவு வண்டியில் சடலத்தைக் கொண்டு வந்தமைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அந்த நோயாளர் காவு வண்டியிலேயே குழந்தையுடன் சடலத்துடன் தாயைப் பலமணிநேரம் காக்க வைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
நீண்ட நேர இழுபறியின் பின்னரே தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஏற்றுக் கொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நடைமுறைகள் மீறப்பட்டிருந்தாலும் மனிதாபிமானம் இன்றி குழந்தையின் சடலத்துடன் தாயைக் காக்க வைத்தமைக்குப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, இது தொடர்பில் தனக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். முறைப்பாடு கிடைத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.