யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
நேற்றுமுன்தினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை 12ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் கண்காணிப்புடன் விண்ணப்பித்திருக்கும் மூவரினதும் கல்வித் தகைமை, அனுபவம், மற்றும் ஆளுமைத் திறன்களை மையப்படுத்தி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட 7 வகைப் புள்ளித் திட்டத்தின் படி பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் புள்ளிகளையிடுவர்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெறும் மொத்தப் புள்ளிகளின் படி – திறமை அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விவரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ.கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி.வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.