யாழ். மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் ஒத்திகை நடவடிக்கை மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாக்குகள் எண்ணும் ஒத்திகை நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட வாக்குச்சீட்டின் நீளம் 23 அங்குலமாகும். அதன் அடிப்படையிலே சராசரியாக இன்று நாங்கள் 6 ஆயிரம் வாக்குச் சீட்டுக்களை கணக்கெடுத்தோம்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்குகளை எவ்வாறு கணக்கெடுப்பது, அதனால் எவ்வளவு நேரம் எடுக்கின்றது மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றி உத்தியோகத்தர் எவ்வாறு பணியாற்றி கொள்ள வேண்டும் போன்ற பல விடயங்களை அவதானித்து வாக்குகள் எண்ணும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 6 ஆயிரம் வாக்குகளை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் சுகாதார நடைமுறையை பின்பற்றவேண்டிய கடப்பாடு இங்கே முக்கியமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் சுகாதார நடைமுறைக்கேற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த வாக்குச்சீட்டு என்னும் பணியினை மேற்கொண்டுள்ளோம்” என கூறினார்.