தேவதத்த மன்னனால் துறவியாக முடியுமானால், கருணா அம்மானும் வரலாற்றிலிருந்து தப்பித்து வேறு நபராக, நல்லவராக மாற முடியுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “கருணா அம்மான், நீண்ட காலமாக ஒரு கொடுங்கோலன் அல்ல.
அதாவது, மக்களுக்கு தீங்கு செய்த மன்னனான தேவதத்தனால் துறவியாக முடியுமானால், கருணாவாலும் நல்ல மனிதராக முடியும்.
இது கருணா அம்மானுக்கு மட்டுமல்ல, இராணுவத்தால் கைது செய்யப்பட்ட டில்வின் சில்வாவிற்கும் பொதுவானது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்நாட்டு போரின்போது இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியபோதே கருணா அம்மான் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானுடைய கருத்துக்கு தென்னிலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் சில கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக கருத்தினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.