யாழ். குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத் திட்டம் அடுத்த ஆண்டு டிசெம்பர் மாதம் அளவிலேயே ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் குடாநாட்டின் தேவையின் 50 சதவீதத்தையே பூர்த்தி செய்ய முடியும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் என்.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டையின் குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அங்கு முதலிட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு உற்பத்திகளை மேற்கொள்ள குடிநீர் தேவை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது பதிலளித்த முகாமையாளர் ஜெகதீஸ்வரன், வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் சிலருடன் சந்திப்பு நடைபெற்றது.
அவர்களும் குடிநீர் கேட்கின்றார்கள். வடமராட்சி கிழக்கில் கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கி விநியோகிக்கும் யாழ்ப்பாண குடிநீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு குடிநீரை விநியோகிக்க முடியும். அதுவரை எம்மால் குடிநீரை விநியோகிக்க முடியாது.
260 மில்லியன் அமெரிக்க டொலரில் முன்னெடுக்கப்படும் அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு டிசெம்பரே நடைமுறைக்கு வரக்கூடும். அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் குடாநாட்டின் தேவையின் 50 சதவீதத்தையே பூர்த்தி செய்யமுடியும் என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அப்படியானால் எஞ்சிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இன்னொரு திட்டம் தேவைதானே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முகாமையாளர் ஜெகதீஸ்வரன் ஆம் என்று பதிலளித்தார்.