யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 294 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 9 மரணங்களும் பதிவாகியுள்ளன என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (டிசம்பர் 27) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 237 தொற்றாளர்களும், நவம்பர் மாதத்தில் 367 தொற்றாளர்களும், டிசம்பர் மாதத்தில் 570 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களிலும் கொவிட் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் காரணமாக மிகக் குறைந்தளவு டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.
சில வருடங்களில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 9 உயிரிழப்புக்கள் காணப்படுவது மிகக் கூடிய ஒரு அதிகரிப்பாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.