முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 15) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
நடப்பாண்டின் காலண்டுக்கான கூட்டமாக இது அமைந்தது. தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டம் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
வீட்டுத்திட்டம், குடி தண்ணீர், வாழ்வாதாரம், உலருணவு, கல்விக்கான உதவி, சுயதொழில் ஊக்குவிப்பு, சமூக விழிப்புணர்வு, தொழில் வழிகாட்டல், கிராமிய அத்தியாவசிய உட்கட்டுமானத் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்படன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது என்றும், அதற்கு ஏற்றால் போல் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் உதவித் திட்டங்களை வழங்க முன்வருதல் சிறந்ததாக அமையும் என்றும் மாவட்டச் செயலர் ஆலோசனைக் கருத்துக்களை வழங்கினார்.