முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றையதினம் (மே 19) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் தனது 60 ஆவது வயதில் அரச சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 29.02. 2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபாராக கடமையைப் பொறுப்பேற்றார்.
இந்தக் காலம் உலகை உலுக்கிய பேரிடர் கொரோனா காலம். அதன் பின்னர் நிதி நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு , பொருளாதார நெருக்கடி, புரவிப்புயல், மண்டோஸ் புயல் எனப் பல இடர்களும் சவால்களும் துரத்தி துரத்தி தாக்கினாலும் தன்னுடைய நிர்வாகத் திறமையினால் மாவட்டத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற திணைக்களங்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக சிறப்பான சேவையை வழங்கினார்.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களும் ஒன்றாக பிரசன்னமாகி ஒரு அரச அதிபரின் சேவைநலன் பாராட்டில் கலந்துகொண்ட முதல் நிகழ்வாக இது பதிவானது.
யாராக இருப்பினும் பாரபட்சம் பாராது பழகும், பணியாற்றும் ஒப்பற்ற சேவையாளன் எங்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வரலாற்றில் மிகச் சிறப்பான சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.
அனைத்து திணைக்களங்கள அதிகாரிகளுடனும் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் , சமூக மட்டத்திலான சங்கங்கள், மக்கள் என எல்லோருடனும் கனிவாக பழகும் நல்ல மனிதம் பொங்கும் எளிமையான மனிதராக இருந்த மாவட்ட அரசாங்க அதிபரை அவர் தம் துணைவியாரையும் அனைவரும் வாழ்த்திக் கௌரவித்தார்கள்.
இந்த பாராட்டுவிழாவில் இராஜாங்க அமைச்சர் திரு.காதர் மஸ்தான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதிஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ.சரச்சந்திர, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டி மெல், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், வட மாகாண நில அளவையாளர் நாயகம் திரு.பொ.சிவானந்தன், வடமாகாண நீர்பாசனப் பணிப்பாளர் திரு.ந.சுதாகரன், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.