முல்லைத்தீவு மாவட்டம், தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(ஜூலை 10) காலை 11.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தண்ணிமுறிப்பு விவசாயப் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தினார்கள்.
தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில் நெல் கொள்வனவின் விலை தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களால் மிகக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதனால் தாம் பெரும் நஸ்டத்தினை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு தண்ணிமுறிப்பு வயல்வெளிக்கு செல்லும் தெற்குவாய்க்கால் மற்றும் மத்திய வாய்க்கால் வீதிகள் நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கையினை கடும் சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தங்கள் கோரிக்கைகளை கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இதற்கு பதில் வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் தற்போது தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிடகையினை மேற்கொள்வதாகவும், அதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நிலைமை காரணமாக தற்போது பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உறுதி வழங்கமுடியாதெனவும் தெரித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.