முற்றவெளி திடலில் இருந்து சேவையை வழங்க தயார்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும்
இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே மேற்படி விடயம் எட்டப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தை புதிய நிர்மாணத்துடன் புனரமைப்பு செய்து அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவிருந்த திட்டம் இ.போ.சவின் முரண்டு பிடிப்பால் இவ்வளவு காலமும் இழுபறி நிலையில் இருந்து வந்தது.
நகரின் மத்திய பகுதி எந்த வித அபிவிருத்திகளும் இன்றி அழுக்கடைந்து காட்சியளித்துவருகிறது.
பல ஊடகங்களில் இது பற்றி விமர்சனங்கள் எழுந்திருந்தமை யாவரும் அறிந்ததே!
இந்த நிலையில் யாழ் மாநகர சபையில் இறுதியாக அமைக்கப்பட்ட தனியார் பேரூந்துக்கான நெடுந்தூர சேவைக்கென நிரந்தர கட்டடம் ஒன்று அண்மையில் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்டு, யாழ் மாநகர சபையால் தனியார் பேரூந்து சேவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது நகரின் வாகன நெரிசலை குறைப்பதற்காக இ.போ.சவையும் நெடுந்தூரத்துக்கான இணைந்த நேர சேவையினை இங்கிருந்து வழங்குமாறு பணித்தது யாழ் மாநகர சபை.
இதில் இருந்து தோன்றிய பெரும் சர்ச்சை அண்மைய யாழ் நகர வர்த்தக நிறுவனங்களின் பொதுமுடக்கத்துக்கும் காரணமென பரவலாக பேசப்பட்டு வந்தது.
எனினும் தமது சேவையினை இதுவரை காலமும் பழைய இடத்திலிருந்தே வழங்குவோம் என முரண்டு பிடித்த இ.போ.ச வினர் இன்று முடிவுக்கு வந்தனர்.
இரண்டு வருட கால ஒப்பந்ததில் யாழ் முற்றவெளி திடலில் தமது சேவையினை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தியின் பின் தமது வழமையான இடத்தில் இருந்து சேவையை தொடருவதற்கும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
முற்றவெளி திடலில் தற்காலிக கொட்டகையை அமைத்து கொடுப்பதற்கு மாநகரசபை முன்வந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை – மாநகரசபை இழுபறி நிலையும் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
தூய்மையான யாழ் நகரத்தை இனி காண்போம்