ஜூலை முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 3.15 சதவீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 0 முதல் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் உள்நாட்டு பயனர்களுக்கு 26.9 சதவீத கட்டண திருத்தம் இருக்கும்.
இலங்கை மின்சார சபை 30 அலகுகளுக்கு உள்பட்ட மின்பாவனைக்கு ஒரு அலகு கட்டணத்தை 30 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகக் குறைக்க முன்வந்துள்ளது.
இதற்கிடையில், நிலையான கட்டணமும் 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதத்திற்கு 31 முதல் 60 அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஜூலை முதல் 10.8 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு 31 முதல் 60 அலகுகளை பயன்படுத்துவோருக்கு ஒரு அலகு கட்டணம் 37 ரூபாயலிருந்து 36 ரூபாயாகக் குறைக்கப்படவுள்ளது. நிலையான கட்டணமும் 550 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகக் குறைவடையவுள்ளது.
மின்சார சபையின் முன்மொழிவின்படி, மாதாந்தம் 61 முதல் 90 அலகுகளைப் பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு ஒரு அலகுக்கு 42 ரூபாயிலிருந்து 39 ரூபாயாகக் கட்டணம் குறைவடையும். நிலையான கட்டணமும் 650 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகக் குறைக்கப்படும்.
மேலும், மாதம் ஒன்றுக்கு 91 முதல் 180 அலகுகளை பயன்படுத்துவோருக்கு 3.4 சதவீதம் கட்டணக் குறைப்புக்கு முன்மொழியப்பட்டுள்ளது. 30 நாள் சுழற்சியில் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 1.3 சதவீதமும் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை ஒட்டுமொத்தமாக 3.2 வீதத்தால் குறைக்கவும் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையில், ஹோட்டல் துறையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 12.6 சதவீத மின் கட்டணம் குறைக்கப்படும்.
எவ்வாறாயினும், ஜூலை-டிசம்பர் காலப்பகுதியில் அரசு மற்றும் தொழில்துறை துறைகளுக்கான மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
இந்த முன்மொழிவு ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் இதுவாகும்.