மாகாணங்களுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது என்பவற்றை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசாங்கத்துக்கு 7 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளன.
இந்தக் கால அவகாசத்தில் 3 விடயங்களையும் ரணில் தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் இருந்து விலகிக் கொள்வது என்று அந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று (ஜனவரி 9) நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நாளை (ஜனவரி 10) சந்திப்பு நடக்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி – அல்லது வேறு ஏதாவது வழிமுறைகள் ஊடாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தயராக இல்லை எனில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை தொடர்வதில் பயனில்லை என்று தமிழ்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், கே.எம்.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.