இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நால்வருக்கு கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்களுடன் இராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாராய்ச்சி ஆகியோரே தடைக்கு ஆளாகியுள்ளனர்.
விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் கௌரவ மெலனி ஜோலி இன்று தெரிவித்தார்.
சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு ஒரு பரிவர்த்தனை தடை விதிக்கப்படுகின்றது.
இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்குள் அனுமதிக்க முடியாதவாறு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்