யாழ்ப்பாணம் – மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டைதீவு, கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் தெற்கு கடற்கரை சுடலை வீதியில் உள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணிகளை கடற்படையினரின் முகாமை விஸ்தரிப்பதற்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இன்று நில அளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதன்படி நில அளவை திணைக்களத்தினர் அங்கு வருகை தந்த போது அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். அத்துடன் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து எழுத்து மூலமான கடிதத்தினையும் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் நிலங்களை அளப்பதை கைவிட்டு சென்றனர். குறித்த மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலைமை காணப்பட்டது.
அப்பகுதியில் ஏராளமான பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும், கடற்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புலனாய்வாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான ஈ .சரவணபவன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் , கஜதீபன் சட்டத்தரணிகளான நடராஜர் காண்டீபன் கனகரத்தினம் சுகாஷ் , தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி செயலாளர் சேனாதிராசா கலை அமுதன் , உபசெயலாளர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி , கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , சிறீபத்மராஜா , மேரி மற்றில்டா ( தங்கராணி ) , கோபாலகிருஷ்ணன் , ஞானேஸ்வரன் கேதீஸ்வரன் , ஜெயகரன் , யாழ் மாநகரசபை பிரதி மேயர் ஈசன் , மண்டைதீவு தர்சன் , தனுபன் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர் .