நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை தொடர்பாக சரியான திட்டமிடல்கள் மேற்கொள்ளாமல் உரிய அதிகாரிகள் அசமந்தமான போக்கினை கடைப்பிடித்து வருவது மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்ட காலங்களில் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்ட போதும், தற்போதை கடல் வற்றுக்காரணமாக காலையில் படகு சேவையினை நடாத்த முடியாது எனவும் அதற்கு பதிலாக நெடுந்தீவு பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரா தேவா படகு பயணிகள் போக்குவரத்திற்கு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேச சபை தவிசாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.
ஆயினும் இன்று காலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடாத காரணத்தினால் அதற்கு பதிலாக கூளர் படகு பயனிகளை ஏற்றிச் சென்றது. ஆயினும் அவர்கள் பொருட்கள் ஏற்றுவதற்காகவே வருகை தந்ததாகவும் விரும்பினால் தாம் புறப்படும் போது மக்களை ஏற்றி வருவதாகவும் தெரிவித்து குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து காலை 09.15 மணிக்கு பின்னர் வீதி திருத்த வேலைக்கான கற்கள் ஏற்றிய பின்னரே பிரயானிகளையும் ஏற்றி படகு புறப்பட்டது.
இது தொடர்பாக பிரதேச சபைத் தலைவர் அவர்களை தொடர்பு கொண்ட போது, இன்று காலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்க படகினை ஒழுங்கு படுத்தியதாகவும், படகு சேவையில் ஈடுபடவில்லை எனும் செய்தி தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் ஏற்றுவதற்கு வழங்கப்படும் முன்னுரிமை பிரயாணிகளுக்கு வழங்கப்படுவதில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன் அவர்கள் பொருட்கள் ஏற்றிச் செல்லுகின்ற படகுககளில் இலவசமாக மக்களை ஏற்றவில்லை அதற்கான கொடுப்பனவினையும் பெற்றுக்கொள்ளுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் போக்குவரத்திற்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கையினை உரியவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்பது எமது வேண்டுகோளாக உள்ளது.