நெடுந்தீவு குறிக்ட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து சேவையானது தொடர்ச்சியாக மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக போக்குவரத்து படகுகள் அடிக்கடி பழுதடையும் நிலையும் போக்குவரத்து நேரங்கள் மாற்றமடையும் நிலமையும் மக்களை அவல நிலைக்கு உள்ளாக்கி வருகின்றது
இன்றைய தினம் (ஜீலை 25) மாலை குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் தண்ணி உள்வரும் நிலை அதிகரித்துக் காணப்பட்டமையால், குமுதினிப்படகு நாளை திருத்த வேலைகள் மேற்கொள்ளும் முகமாக திடிரென போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
மாலை 3.00 மணிக்கு புறப்படும் தனியார் படகு புறப்படாமையினால் அனைத்து மக்களும் 04.00 மணிக்கு தனியார் படகினிலேயே பயணம் மேற்கொண்டனர் 85 பயணிகள் அதிக பொருட்கள் மோட்டார் சைக்கிள்கள் என கடும் காற்றின் மத்தியில் பாதுகாப்பற்ற நிலையிலேயே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வடதாரகை ஏற்கனவே பழுதடைந்த நிலையில் தரித்துக் காணப்படுகின்றது நேற்றைய தினம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவா பழுதடைந்து திருத்த வேலைகள் நடைபெறுகின்றது. இன்று குமுதினி பழுதடைந்துள்ளது நெடுந்தாரகை போதிய சேவையினை மக்களுக்கு வழங்குவதில்லை அத்துடன் அப்படகும் திருத்தம் செய்ய வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு சில நேரங்களில் படகு சேவைகள் சீராக இடம் பெறுவதில்லை போன்ற பல இன்னல்கள் நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தற்போதை தேர்தல் காலங்களில் அனைத்து கட்சிகளும் கட்சிகளது முக்கிய வேட்பாளர்களும் மக்கள் சேவை எனக்கூறி வாக்குக் கேட்டு தீவகத்திற்கு வருகின்றனர் ஆனாலும் மக்களது தேவையில் கரிசனை கொள்வதில்லை என்பது மக்களது பெரும் குறையாகவே காணப்படுகின்றது குமுதினி போல் இன்னும் இரண்டு படகுகள் அமைத்து வழங்கும் பட்சத்தில் பயணிகள் போக்குவரத்து சீர் செய்யப்படும் என்பதே மக்கள் கருத்தாக காணப்படுகின்றது.