தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாந்தினி (வயது 43) என்ற பெண் தீக்காயங்களுடன் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த பெண்ணின் கணவருக்குப் பழக்கமானவர்.
கணவருடன் வீட்டுக்கும் வந்து செல்லும் இந்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் வாங்குவதற்காக குடும்பப் பெண்ணை அச்சுறுத்தி சில தடவைகள் அந்த இளைஞர் பணம் பெற்றுள்ளார். இந்த விடயம் கணவருக்குத் தெரியவர வீட்டுக்கு வரக்கூடாது என்று இளைஞரை எச்சரித்துள்ளார்.
இந்தநிலையிலேயே குடும்பப் பெண் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டது. ஆயினும் அவரை எரிகாயங்களுடன் மீட்ட இடத்தில் மண்ணெண்ணெய் கலன் இருக்கவில்லை.
இந்தச் சம்பவத்துக்கு போதைக்கு அடிமையான இளைஞரே காரணம் என்று உறவினர்கள் கூறுகின்றனர். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு அந்த இளைஞர் வந்தார் என்று அயலவர்கள் கூறுகின்றனர்.
அதையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனின் கையில் தீக்காயம் உள்ளது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்பு விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டது.