யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்றார் என்ற பெருமையை பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறையில் 2010 ஆம் ஆண்டு முதல் முதுநிலை விரிவுரையாளராகச் சேவையாற்றி வரும் பேராசிரியர் தி. குமணன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பேராசிரியர் தெரிவுக்கான சகல தேவைப்பாடுகளையும் நிறைவு செய்துள்ள நிலையில் நடத்தப்பட்ட மூன்று நிலை நேர்முகத் தேர்வுகளிலும் தேறி, பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றிருக்கிறார்.
நேற்று 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் 2018 நவம்பர் 29ஆம் திகதி முதல் அவருக்கு பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசின் (விகடகவி) புதல்வரான குமணன், அளவெட்டி அருணோதயக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயின்று 2000ஆம் ஆண்டு மருத்துவராக வெளியேறினார்.
2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் கீழ் பொது மருத்துவ அதிகாரியாகவும், 2004 முதல் 2007 வரையான காலப் பகுதியில் உயர் மருத்துவக் கற்கைப் பயிலுநராக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் பணியாற்றியுள்ளார். அதன் பின் 2008 – 2009 காலப்பகுதியில் மருத்துவப் பதிவாளராக தமிழ்நாடு, வெல்லூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியிலும் பணியாற்றினார்.
2008ஆம் ஆண்டு பொது மருத்துவ வல்லுநராக தேர்ச்சி பெற்ற திருநாவுக்கரசு குமணன், 2010ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைவராக பொது மருத்துவ வல்லுநர் குமணன் சேவையாற்றினார்.
இந்த நிலையில் மருத்துவத் துறை பேராசிரியராக அவரது பெயர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு முன்மொழியப்பட்டது. அதற்கு பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலையில் மருத்துவ பீடத்தின் மூன்றாவது பேராசிரியராகவும் மருத்துவத் துறையில் முதலாவது பேராசிரியராகவும் அவர் விளங்குகிறார்